×

சென்னை, குஜராத் போலீசார் அதிரடி கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர் கைது: ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகள், பிரின்டர் பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூரில் கள்ள நோட்டு அடித்து அதை குஜராத்தில் மாற்றிய வழக்கில், குஜராத் மற்றும் சென்னை போலீசார் இணைந்து கள்ள நோட்டு ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், பிரின்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் அம்ரோலி காவல் நிலையத்தில் பதிவான கள்ளநோட்டு வழக்கில் தொடர்புடைய நபர் சென்னையில் இருப்பதாக குஜராத் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குஜராத் போலீசார் சென்னைக்கு வந்து, சென்னை பெருநகர காவல் துறையினரின் உதவியை நாடினர். கொடுங்கையூர் போலீசார் உதவியுடன் கொடுங்கையூர் சேலவாயில் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (36) என்ற நபரை நேற்று கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில், மணலி கோவிந்தசாமி தெருவில் உள்ள அவரது சகோதரி வீட்டில் கள்ளநோட்டுகளை அச்சடித்து, அதனை குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்படி மணலி கோவிந்தசாமி தெருவில் உள்ள சூர்யாவின் சகோதரி வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் பணம் தயாரிக்க பயன்படுத்திய இரண்டு பிரிண்டர் இயந்திரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சூர்யாவிடம் தொடர்ந்து குஜராத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை, குஜராத் போலீசார் அதிரடி கள்ளநோட்டு அச்சடித்த வாலிபர் கைது: ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகள், பிரின்டர் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai, Gujarat ,Perambur ,Kodunkaiyur ,Gujarat ,Chennai ,
× RELATED தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட...